Friday 20 February 2015

மோடியின் த்யாகம்


       பரிசாக வந்த பல லட்சம் பெறுமானமுள்ள உடையை ,தன் பெயர் பொரித்த ஆடையை ஒரே ஒரு முறை அணிந்து பின் அதனை ஏலம் விட்டு ,அதன் மூலம் கிடைக்கும் கோடிகளை கங்கையை சுத்தபடுத்த தரும் மோடிஜியின் த்யாகம்,பெருந்தன்மை கண்களை பனிக்க வைக்கிறது

       தினமும் அவருக்கு யாராவது இதே போல பரிசுகளை வழங்கினால்,அவரும் அவற்றை பயன்படுத்தி விட்டு பின் ஏலம் விட்டால்(புரட்சி தலைவி அம்மாவும் டான்சி நிலத்தை ஏலம் விட்டு காவேரியில் தூர் வார தந்திருந்தால் ஒரு முறை பதவி இழக்க,பின் உச்சநீதிமன்றம் என்ன செய்தால் வழக்கில் இருந்து தப்பிக்கலாம் என்று விசித்திர தீர்ப்பு தந்து தப்பிக்க வைத்த நிலை வந்திருக்குமா. வளர்ப்பு மகனே பரிசாக வந்தவர் தான் என்று அவரை ஏலம் விட்டிருந்தால் இன்று எந்த வழக்காவது இருந்திருக்குமா.இன்றும் பரிசாக வந்த 3 லட்சம் டாலர் செக்கை மோடியை போல ஏலம் விட செய்தால் வழக்காவது ஒன்றாவது,த்யாக சீலர் பட்டம் தன்னால் தேடி வருமே) வரும் பல ஆயிரம் கோடியை வைத்து கங்கையை மட்டுமா ,இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் மற்றும் அவர் பிரதமராக பதவி ஏற்ற பின் சென்ற நாடுகளில் உள்ள அனைத்து நதிகளையும் சுத்தபடுத்தி விடலாமே.
      என்னன்ன பொருட்களை பரிசாக தந்தால் ஏலம் விட வசதியாக இருக்கும் என்று எண்ணியதில் வந்த சில யோசனைகள்
   
       அதானி மற்றும் அம்பானி போன்றவர்கள் மோடி மோடி என்று எழுதப்பட்ட விமானங்களை.ஜெட்களை பரிசாக அளிக்கலாம்.பல நூறு முறை அவர் பயணம் செய்த அதானியின் விமானத்தை ஏன் அவர் ஏலம் விடவில்லை என்று சில கிருத்துவ கைக்கூலிகள் கேட்க கூடும். அந்த விமானத்தில் அதானி என்று தான் எழுதி இருந்ததே தவிர மோடி என்று அல்ல என்பதை அறியாத எத்தர்கள் அல்ல அவர்கள்.மோடி என்று எழுதிய ஆடை என்பதால் தான் மோடி அவர்களுக்கு அந்த ஆடை தனக்கு சொந்தம் என்ற எண்ணமே உருவானது.அதனால் தான் அதனை ஏலம் விட ஆணை இட்டார் என்ற உண்மையை ஊர் முழுக்க சொன்னால் தான் போலி மதசார்பின்மைவாதிகளின் முகத்திரையை கிழிக்க முடியும்.

        ஒரு முறை தனியார் விமானத்தில் பறக்க பல லட்சம் ரூபாய் செலவு என்றாலும் ஒரு ரூபாய் கூட தராமல் அடானியின் விமானத்தில் பல நூறு முறை பறந்து இந்தியா முழுவதும் சுற்றிய த்யாகத்தின் திருவுருவை பார்த்து ,அவர் ஆடையை வைத்து கிண்டல் செய்த ஐந்தாம்படையினர் அஞ்சுமாறு மோடியின் பெயர் பொறித்த தங்க /வைர ஆபரணங்களை பரிசாக தரலாம்.நகையும் ஒரு ஆடை தானே.துறவி போல வாழ்ந்தாலும் பரிசாக தருபவர்கள் மனம் கோண கூடாது என்பதால் அவற்றை அணியும் உன்னத மனிதன் உடலில் பட்ட வைர/தங்க நகைகள் மாணிக்கங்களை விட அதிக விலைக்கு ஏலம் போகும் என்பதில் ஏதேனும் சந்தேகம் இருக்கிறதா
இயேசுவின் ரத்தம் ஜெயம்,ஜெய் ஸ்ரீ ராம்,இன்ஷா அல்லா என்று மோடியின் பெயரோடு ஒரு ஓரத்தில் மேற்கூறியவை பொறிக்கப்பட்ட ஆடைகளை அவருக்கு பரிசாக தரலாம். பெருந்தன்மை @மோடி அவற்றை அணிந்த பின் விடும் ஏலத்தில் எந்த உடை அதிக தொகைக்கு போகும் என்று மதங்களுக்கு இடையே நடக்கும் போட்டியினால் கிடைக்கும் தொகையை வைத்து இந்தியாவின் அனைத்து கடன்களையும் அடைத்து விடலாமே

        பிரச்சாரம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட உமாசங்கர் IAS அவர்களுக்கு மோடியின் வடிவில் இயேசு வழி காட்டி இருக்கிறார். ஏசுவே ஒரே கடவுள்,ஏசுவே உண்மை கடவுள் ,துர்தேவதைகளிடம் இருந்து என்னை மீட்ட பிதாவே எங்களை ரட்சியும் என்று எழுதப்பட்ட ஆடைகளை அணிந்து கொண்டு பணிக்கு வந்தால் மோடியின் ஆட்சியில் அவரை பின்பற்றி வாழ்வதால் சங்க பரிவாரங்களும் அவரை போற்றும்.ஓய்வு நேரம் மட்டுமல்லாமல் பணி நேரத்திலும் ஏசுவுக்கு சேவகம் செய்த மனநிறைவும் உண்டாகும்.

        தங்க குல்லாக்களும்,தங்கத்தில் செய்யப்பட்ட சீக்கிய தலைப்பாக்களையும் பரிசாக வழங்கலாம்.குல்லா போடுவதில் உலகத்திலேயே தலை சிறந்தவர் ஆயிற்றே மோடிஜி அவர்கள்.அவர் போட்ட குல்லாயை வாங்க உலக தலைவர்களே நான் நீ என்று போட்டி போடுவார்கள்.

        மோடி மோடி என்று பெயர் பொறிக்கப்பட்ட கொசு மட்டைகளை பரிசாக வழங்கலாம்.குஜராத்தில் அவர் பெயரை கேட்டே ஓடிய கொசுக்கள் ,அதனால் கொசு இல்லாத மாநிலமாக ,இந்தியாவின் நம்பர் ஒன் மாநிலமாக,நோய் இல்லாத மாநிலமாக மாறிய குஜராத் போல இந்தியா முழுவதும் மாறி விடுமே.கொசு அடித்தாலும் மோடி பெயர பொரித்த மோடி பயன்படுத்திய கொசு மட்டையால் அடிக்கும் பாக்கியத்துக்காக எத்தனை கோடிகள் கொடுக்கவும் தொழில் அதிபர்கள் தயங்க மாட்டார்களே

          குஜராத்தில் 0-6 ஆண்.பெண் சதவீதம் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 883 2011இல் 886.இந்த மகத்தான சாதனையை நினைவு கூறும் விதமாக மூன்று பெண் சிசுக்களின் தங்க சிலையை பரிசாக தரலாம். 10 ஆண்டுகளில் அவர் நடத்தி கட்டிய இந்த சாதனையை பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்தாலும் யாரும் எட்ட முடியாது என்பதை உலகுக்கே அறிவிக்கும் பரிசாக இருக்குமே இந்த மூன்று பெண் குழந்தைகளின் சிலைகள்

          5 ஆண்டுகள் குஜராத் கிரிக்கெட் சங்க தலைவராக அவர் சாதித்த வரலாற்று சாதனைகளை(சாதனைகள் தொடர பொறுப்பை அமித் ஷாவிடம் ஒப்படைத்து உள்ளார் எனபது கொசுறு செய்தி) நினைவுபடுத்தும் விதமாக மோடி பெயர் பதித்த ஸ்டம்ப்/மட்டை/பந்துகளை பரிசாக தரலாம். அவற்றை ஏலத்தில் எடுக்க நடக்கும் போட்டி IPL ஏலத்தை தூக்கி சாப்பிட்டு விடுமே

No comments:

Post a Comment